நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள நுண்ணிய தூசித் துகள்களை ஆராயும் நாசாவின் ‘பஃபின்ஸ்’ விண்வெளித் திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக, பெங்களூருவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி டாக்டர் ரம்யா ஆஞ்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஸ்டீவர்டு வானாய்வகத்தில் உதவி ஆராய்ச்சிப் பேராசிரியராக இவர் பணியாற்றுகிறார். இத்திட்டத்துக்கு நாசா 2 கோடி டாலர் நிதி வழங்கியுள்ளது. சிறிய செயற்கைக்கோளில் பொருத்தப்படும் 10 அங்குலத் தொலைநோக்கி, சுமார் 70 தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை ஆய்வு செய்யும். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையிலிருந்து இந்தக் கண்காணிப்பு நடைபெறும்.நட்சத்திர ஒளி, விண்வெளித் தூசித் துகள்களைக் கடக்கும்போது அதன் பண்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அளவிடுவதன் மூலம் தூசித் துகள்களின் அமைப்பு, தன்மை, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றை விஞ்ஞானிகள் அறிய முடியும். குறிப்பாக, 50 நானோமீட்டருக்கும் சிறிய துகள்களை இத்திட்டம் ஆராயும். நட்சத்திரங்களும் கோள்களும் உருவாவதில் இந்தத் துகள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பால்வீதியின் காந்தப்புலத்துடன் அவை எவ்வாறு ஒருங்கிணைகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படும்.
இதற்காகப் பயன்படுத்தப்படும் புறஊதா ஒளியின் அலைநீளவாரியான முனைவாக்கத்தை அளவிடும் தொழில்நுட்பம், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம், டெக்சாஸின் மெக்டொனால்டு வானாய்வகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. புனேயிலுள்ள வானியல் மற்றும் வானியற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையமும், பெங்களூருவிலுள்ள இந்திய வானியற்பியல் நிறுவனமும் இதில் பங்கேற்கின்றன.
தற்போது ஆரம்ப வடிவமைப்பு நிலையில் உள்ள இத்திட்டத்தை 2030-ல் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மெக்டொனால்டு வானாய்வகம் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளித் தொலைநோக்கிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த ஆய்வு உதவும்.